 |
|
|
கும்மிடிப்பூண்டி: காதலை பிரித்த எஸ்.ஐ.,யை பழிவாங்க எண்ணி அவர் பணியாற்றிய தடா பகுதியில் ஓடும் பஸ்சில் மூவரை கொலை செய்த "சைக்கோ' கொலையாளியை ஆந்திர போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திர மாநிலத்திற்கு உட்பட்ட தடா பகுதியில் ஓடும் பஸ்சில் மர்ம நபர் ஒருவர், உடன் பயணித்த மூவரை கொலை செய்து தப்பி ஓடினார். நெல்லூர் எஸ்.பி., ரமணகுமார் தலைமையிலான போலீசார் கொலையாளியை பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். இவ்வழக்கில் நேற்று ஒருவர் கைதானார். விசாரணையில், தடா எஸ்.ஐ., சீனிவாசலு ரெட்டியை பழி தீர்க்க அவர் கொலைகளை செய்தது தெரியவந்துள்ளது. ஆந்திர மாநிலம் நெல்கோண்டா மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசு, 28, ஐதராபாத்தில் மருத்துவ பிரதிநிதியாக பணியாற்றினார்.
அப்போது மருத்துவமனை ஒன்றின் மருந்தகத்தில் பணியாற்றிய ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டு இருவரும் ஒன்றரை வருடமாக காதலித்தனர்.
சீனிவாசு நடவடிக்கையில் வெறுப்படைந்த காதலி, அவரை பிரிந்து நெல்லூர் அருகே தனது சொந்த ஊரான மனுபோலுக்கு வந்தார். காதலியை பிரிய மனமில்லாத சீனிவாசு, மனுபோலுக்கு சென்று தன் காதலியை திருமணம் செய்ய வற்புறுத்தினார்.
இதையடுத்து காதலியின் பெற்றோர், மனுபோ<லு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கை விசாரித்த எஸ்.ஐ., சீனிவாசலு ரெட்டி, சீனிவாசுவை கண்டித்து அனுப்பினார். காதலை பிரித்த எஸ்.ஐ.,க்கு சீனிவாசு அனுப்பிய கைபேசி குறுந்தகவலில்," உன்னை பழி தீர்க்காமல் விட மாட்டேன்' என தெரிவித்துள்ளார்.இந்நிலையில் சீனிவாசலு ரெட்டி, தடா போலீஸ் நிலைய எஸ்.ஐ.,யாக மாற்றலானார்.
இதையறிந்த சீனிவாசு, ஆந்திர மாநில அரசு போக்குவரத்து பஸ்சில் ஏறி உடன் பயணித்த மூவரை கொலை செய்து தப்பி ஓடினார். எஸ்.ஐ., சீனிவாசலு ரெட்டிக்கு பணி ரீதியாக நெருக்கடி கொடுக்கும் எண்ணத்தில் 'சைக்கோ' போன்று நடந்துள்ளார். கைபேசியில் வந்த குறுந்தகவலை கொண்டு போலீசார் விசாரித்தபோது சீனிவாசு, விஜயவாடாவில் சிக்கினார். அவரிடம் விசாரித்ததில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் மீது வழக்கு பதிந்த போலீசார் மேலும் விசாரிக்கின்றனர். |