உலகில் அதிகளவான கடத்தல்கள் காரணமாக மோதல்கள் நிலவும் நாடுகளில் பிரதான நாடாக இலங்கை மாறியுள்ளது

March 22, 2009

1980களின் இறுதியிலும் 1990களின் ஆரம்பப்பகுதியிலும் நடைபெற்றதைப் போன்ற பெருமளவிலான கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் இலங்கையில் இன்று நடைபெற்று வருகின்றதற்கு நாங்கள் சாட்சியாக இருக்கறோம்.
தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அன்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அன்று அவர் இம்மாதிரியான சம்பவங்களுக்கு எதிராக போராடுவதில் ஒரு முன்னணிப் பாத்திரத்தை வகித்தார். ஆனால் இன்றோ அவருடைய அரசாங்கம்  உலகிலேயே மிக மோசமான ஒரு அரசாங்கமாக கடத்தல்கள் காணாமல் போதல்களுக்குப் பொறுப்பான ஒரு கொடிய அரசாங்கமாக இருக்கிறது.
பாதுகாப்புப் படையினர் காவற்துறையினர்; மற்றும் அரசாங்க ஆதரவுக்குழுக்கள் இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அரசாங்கம் இச்சம்பவங்கள் குறித்து தீர்வுகாண புலனாய்வு மற்றும் விசாரணைகளை மேற்கொள்வதாக கூறிக்கொள்கிறது. அரச படைகளுக்கும் இந்தக்கடத்தல்கள் காணாமல் போதல்களுக்கும் எதுவித தொடர்புகளுமில்லை என மறுத்து இச்சம்பவங்கள் இனந்தெரியாத நபர்களால் செய்யப்படுவதாகக் குற்றம்சாட்டி பிரச்சினையின் தீவிரத்தைத் தணிக்க அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது.
போர் நடைபெற்று வரும் இன்றைய சூழ்நிலையில் படையினர் தொடர்பாக இத்தகைய விசாரணைகளை மேற்கொள்வது அவர்களது மனோதிடத்தை பலவீனமாக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
வடக்கில் ஊரடங்குச்சட்ட வேளையில் காவலரணுக்கு அருகாமையில் அல்லது காவலரண்களுக்கு இடையில் நடைபெறும் இச்சம்பவங்கள் இதற்குப் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதைத் தெட்டத் தெளிவாக்குகின்றன.
கடத்தப்பட்ட சிலர் பின்னர் தடுப்பு முகாம்களில் அல்லது  காவற்துறையினரின்; தடுப்புக்காவலில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். மற்றையவர்கள் இது வரை எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது அறியவரவில்லை.
பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆஜராகும் சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமை காப்பாளர்கள் துரோகிகளாக முத்திரை குத்தப்பட்டுள்ளார்கள் அல்லது ஏதோ ஒரு வகையில் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறான சம்பவங்கள் குறித்துத் தமது அக்கறையை வெளியிட்டால் அவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக முத்திரை குத்தப்படுகிறார்கள்.
பல்வேறு முக்கியமான அரசியல் கட்சிகள் பெயரளவில் பாராளுமன்றில் அங்கம் வகிக்கின்றன. அவற்றுக்கு இந்தக் கொடிய கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்களைத் தடுத்து நிறுத்தும் பொறுப்பு  ஏதோ ஒரு வகையில் உள்ளது. ஆனால் இவற்றில் எந்தக்கட்சியும் அதிக அக்கறை எடுத்து இத்தகைய சம்பவங்களை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிக்கவில்லை.
இதையும் மீறி இத்தகைய கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் இனம் காணப்படும் போது அத்தகையவர்கள் தமக்கு சாதகமானவழியில் தமக்கு ஏதுவான அதிகாரங்களைப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கின்றனர். இதன்காரணமாக எந்த அரசியல் கட்சியும் இத்தகைய கடத்தல் மற்றும் காணாமல் போதல்களை முடிவுக்குக் கொண்டு வரவோ அவர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுக்கவோ முன்வருகிறார்களில்லை. காணாமல் போனவர்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை கவனிக்க எவருமற்ற நிலையே தற்போது உள்ளது. 
இந்தச் சூழ்நிலையில் உடனடியாகவும் பயன்விளைக்கும் வகையிலும் நடவடிக்கைகளை மேற்கொண்டு இத்தகைய சம்பவங்களைத் தடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதேவேளை முன்னர் காணாமல் போனவர்கள் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இன்னமும் சட்ட அந்தஸ்துப் பெறவில்லை. தவிரவும் ஆரம்பகாலத்தில் ஏனைநாடுகளுடன் சேர்ந்து இலங்கையும் முன்முயற்சி எடுத்துப் பிரேரித்த காணாமல் போனவர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதனை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.  
எந்த ஒரு அரசாங்கத்தினதும் அடிப்படையான பொறுப்பு சட்டத்தையும் ஒழுங்கையும் நாட்டில் நிலைநாட்டுவதே. ஆனால் இலங்கையைப் பொறுத்த மட்டில் பெருமளவில் நடைபெறும் கடத்தல்கள் காணாமல் போதல்கள் சித்திரவதைகள் சட்டத்தி;ற்குப் புறம்பான படுகொலைகள் என்பவை திட்டமிட்டு நடைபெறுவதைப் பார்த்தம் பார்க்காதது போல இருந்து வருகின்றது. இவ்வாறான சம்பவங்கள் குறித்த நீதித்துறை கவனம் எடுத்ததாகவே தெரியவில்லை. அவசரகாலச்சட்டம் இவ்வாறான சம்பவங்களில் விசாரணை எதுவும் இல்லாமலே கொல்லப்பட்டவர்களுடைய உடல்களை புதைக்கவோ எரிக்கவோ சட்டரீதியாக உதவி புரிகிறது.
தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அதன் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட முறைமையானது இவ்வகையான சம்பவங்கள் குறித்து தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதவாறான ஒரு அரசியல் சூழலை உருவாக்கியுள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பாக முன்னர் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தனது விசாரணைகளில் இச்சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்களாகக் கண்டவர்கள் மீது அரசாங்கம் எத்தகைய பயன்தரக்கூடிய நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இத்தகைய காரணங்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவிலிருந்து இலங்கை வெளியேற்றப்படக் காரணமாக அமைந்தது. ஆனாலும் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைகளுக்கு கடிவாளமிட்டு கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அதனை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளைப் பார்வையிடவென 2007இல் அரசாங்கத்தால் அழைக்கப்பட்ட சர்வதேச கண்காணிப்பாளர்குழு  2008 இன் ஆரம்பத்தில் அரசாங்கம் விசாரணைகளின் போது மனித உரிமைகளுக்கான பண்புகளைக் கடைப்பிடிக்கவில்லை எனக் கூறி தமது நடவடிக்கைகளை இடைநிறுத்திக் கொண்டது.  
இந்த எல்லாவகையான விடயங்களையும் கவனத்தில் கொண்டு இலங்கை அரசால் காணாமல் போதல்களைத் தடுத்த நிறுத்தவோ அவற்றுக்கெதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ முடியாத சூழ்நிலையில் சர்வதேச சமூகம் இதனை தோல்வியடைந்த நாடாக கணித்துள்ளது. காணாமல் போகும் சம்பவங்களை அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வந்து மனித உரிமைகள் தொடர்பாக முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள சிலவேளைகளில் அது சிலவேளைகளில் உதவக் கூடும்.
(எம்.சி.எம்.இக்பால் ‐ இலங்கையின் மனித உரிமைச் செயற்பாட்டாளர். நெதர்லாந்தில் தற்போது உள்ளார்.  
Bottom