ஈழத் தமிழர்களுக்காக விஜயகாந்த் கட்சியைச் சேர்ந்தவர் தீக்குளித்து மரணம்

March 22, 2009

ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதையும், அதனைத் தடுக்க இந்தியா நடவடிக்கை எடுக்காததையும் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம்சிற்றூரைச் சேŒர்ந்த இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்திருக்கின்றார்.
பாலசுந்தரம் என்ற இந்த இளைஞர், விஜயகாந்த் கட்சியான தேசிய முற்போக்கு திராவிடர் கழக கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.

ஈழத்தில் கொல்லப்படும் அப்பாவித் தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கவலை அடைந்திருந்த அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தனது வீட்டில் யாரும் இல்லாதபோது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றித் தீயிட்டுக் கொண்டார்.

பாலசுந்தரத்தின் அலறல் ஓலியைக் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்து பார்த்தபோது பாலசுந்தரம் உடல் முழுவதும் கருகிய நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு முன்பாகவே உயிரிழந்து விட்டார்.

உயிரிழப்பதற்கு முன்பாகப் பேசிய அவர்,

ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழர்களைக் காக்க இந்தியா உதவ வேண்டும். ஈழத்தில் போரை நிறுத்த இந்தியா எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டிக்கும் வகையில்தான் நான் தீக்குளித்தேன் என்று கூறினார்.

36 வயதாகும் பாலசுந்தரத்திற்கு 2 பிள்ளைகள் உள்ளனர். பாலசுந்தரம் சமையல் வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். பாலசுந்தரத்தின் உயிர்த்தியாகத்திற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நெடுமாறன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை கொத்தமங்கலத்தில் தேசிய முற்போக்கு திராவிடர் கழக கட்சியின் பாலசுந்தரம் ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்து இறந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

தமிழக இளைஞர்கள் கட்சி வேறுபாடின்றி ஈழத் தமிழர்களுக்காகத் தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்ய தயாராக உள்ளனர் என்பதையே பாலசுந்தரத்தின் ஈகம்
காட்டுகின்றது.

அவரை இழந்து வாடும் அவ›ன் குடும்பத்தினருக்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீக்குளிப்பு போன்ற நடவடிக்கைகளில் யாரும் ஈடுபட வேண்டாம் என மீண்டும் வேண்டிக் கொள்கிறேன் என்று சென்னையில் வெளியிட்ட அறிக்கையில் நெடுமாறன் கூறியுள்ளார்.

பாலசுந்தரத்தையும் சேர்த்து ஈழத் தமிழர்களுக்காகத் தமிழகத்தில் உயிர்த்தியாகம் செய்து வரும் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

Bottom